ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி
கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, கடம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பிணமாக கிடைப்பதாக தூத்துக்குடியில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிணமாக கிடந்தவர் கடம்பூர் அருகே உள்ள கே. சிதம்பராபுரம், வடக்கு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் நல்லசாமி (வயது 38). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை பரமசிவம் இறந்துவிட்டார். தாய் சரஸ்வதி மற்றும் தம்பி கற்பகராஜ் (32) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டை விட்டு சென்றவர் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.