உடலை துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம்: மதுபோதை தகராறில் லாரி டிரைவர் கொலை-போலீஸ் விசாரணையில் புதிய தகவல்


உடலை துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம்: மதுபோதை தகராறில் லாரி டிரைவர் கொலை-போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
x

தாரமங்கலம் அருகே மதுபோதை தகராறில் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

சேலம்

தாரமங்கலம்:

லாரி டிரைவர் கொலை

தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரனூரை சேர்ந்தவர் மணி (வயது 50). இவர் தாரமங்கலத்தில் உள்ள ஒரு சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவரின் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மணி கைகள் மற்றும் உடலை தனித்தனியாக துண்டித்து மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை, அங்குள்ள ஒரு கிணற்றுக்குள் வீசி உள்ளனர்.

இந்த கொடூர கொலை தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே போலீசார் சந்தேகத்தின் பேரில் கருக்குப்பட்டியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ், துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் செல்வராஜ், மணியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுதத்தால் தாக்கி கொலை

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

லாரி டிரைவர் மணி கொலை வழக்கில் செல்லான் என்கிற செல்வராஜ், சக்திவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மணி தனது நெருங்கிய கூட்டாளியான செல்வராஜூடன் இணைந்து கருக்குப்பட்டி அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டம் அருகே சென்று மது அருந்தி உள்ளார். அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் கையில் இருந்த ஆயுதத்தால் தாக்கி மணியை கொன்றுள்ளார். பின்னர் துண்டு, துண்டாக வெட்டி கிணற்றில் வீசி உள்ளார். இந்த கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

உடலை வாங்க மறுப்பு

இதனிடையே கொலை செய்யப்பட்ட மணியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் என்ன? கொலையில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டுவர வேண்டும் என்றும் கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.


Next Story