லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; 2 மருமகனுடன் மாமியார் பலி
லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; 2 மருமகனுடன் மாமியார் பலி
காங்கயம்
காங்கயம் அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 மருமகனுடன் மாமியார் பலியானார். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மருந்துக்கடை உரிமையாளர்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழி கிராமம் முருகம்பாளையம் பள்ள காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 35). காங்கயம்- பழையகோட்டை சாலையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி நதியா. விஸ்வநாதன் உறவினர் ஒருவரின் திருமணம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்துடன் கலந்நதுகொள்ள விஸ்வநாதன் முடிவு செய்திருந்தார். இதற்காக தனது மாமியாரான பரஞ்சேர்வழி கிராமம் சிவியார்பாளையத்தில் வசித்து வந்த மாமியார் மணி (55) (நதியாவின் தாயார்), மணியின் மற்றொரு மகளான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த உமாவதி (33), இவருடைய கணவர் ரமணன் (37) ஆகியோரை அழைத்து இருந்தார். இவருடைய அழைப்பை ஏற்று, மணி, உமாவதி, ரமணன் ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளக்காட்டுப்புதூர் வந்து விஸ்வநாதன் வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் திமணத்தில் கலந்து கொள்ள ஒரு காரில் விஸ்வநாதன், மணி, உமாவதி, ரமணன் ஆகியோர் நேற்று காலை புறப்பட்டு சென்றனர். காரை விஸ்வநாதன் ஓட்டினார்.
3 பேர் பலி
இவர்களுடைய கார் காங்கயம் - சென்னிமலை சாலை திட்டுப்பாறை அருகே பாரவலசு பகுதியில் நேற்று காலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மேட்டூரில் இருந்து கரூர் நோக்கி சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் முழுவதுமாக உருக்குலைந்தது. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.
இந்த கோர விபத்தில் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி விஸ்வநாதன் மற்றும் மணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரமணன், அவரது மனைவி உமாவதி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மற்றும் காங்கயம் தீயணைப்பு துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணனும் பலியானார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
காயம் அடைந்த உமாவதி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விபத்து காரணமாக அந்த பகுதியில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பன்னர் விபத்துக்குள்ளான லாரி, காரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் காங்கயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.காங்கயம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-------