பர்கூர் அருகேகிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
பர்கூர்
ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து பர்கூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் சரயுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி தனித்துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜெகதேவி அருகே அதிகாரிகளை பார்த்ததும் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் லாரியில் சோதனை செய்தனர். அதில் கிரானைட் கற்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.