பாலக்கோட்டில் குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது-டீசல் டேங்க் உடைந்ததால் பரபரப்பு
பாலக்கோடு:
பாலக்கோட்டில் குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. அப்போது லாரியின் டீசல் டேங்க் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரி கவிழ்ந்தது
கோவா மாநிலத்தில் இருந்து மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்துக்கு புறப்பட்டது. இந்த லாரியை சேலத்தை சேர்ந்த டிரைவர் சேகர் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் இந்த லாரி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலையோர தடுப்பு சுவர் மீது லாரி மோதி, கவிழ்ந்தது. தடுப்பு சுவர் மீது மோதியதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து, அதிலிருந்த டீசல் சாலையில் ஆறாக ஓடியது.
போலீசார் விசாரணை
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் சேகர் உடனடியாக லாரியில் இருந்து வெளியேறி, அங்கிருந்து தப்பி ஓடினார். விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் சிக்கிய லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோட்டில் தடுப்பு சுவர் மீது மோதி லாரி கவிழ்ந்த விபத்தில், டீசல் டேங்க் உடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.