ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்


ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 200 கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 200 கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.

கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள கே.பி.என். லட்சுமி மஹாலில் நேற்று பா.ம.க. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சூளகிரி அருகே உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க அரசு 3,034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரெயில்வே திட்டத்திற்கான சர்வே பணிகள் விரைந்து தொடங்க வேண்டும். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை உள்ளூர் மக்களிடம் சுங்கக்கட்டணத்தில் முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.

புரியாத புதிராக உள்ளது

சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாராயத்தை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு விருது வழங்குகிறார். அதே நாளில் கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் மது அதிகளவில் விற்பனை செய்த ஊழியர்களுக்கு நற்சான்றிதழை, மாவட்ட கலெக்டர் வழங்குகிறார். மதுவிலக்கு கொண்டு வருவதில், தி.மு.க. அரசின் நிலைப்பாடு, கொள்கை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். மது, போதைப்பொருள், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கவர்னர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க தயக்கம் காட்டி வருவது புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய தடையில்லை என ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்

என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்கு விற்க போகிறோம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் யாருக்காக கையகப்படுத்த உள்ளனர். வேளாண்மை துறை அமைச்சர் விவசாயிகளை காக்க வேண்டும். மாறாக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, என்.எல்.சி.க்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறார். விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை முதல்-அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆனால், விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவது மாவட்ட கலெக்டர்கள் தான். அதனால், களஆய்வு திட்டத்தில் எதிர்க்கட்சிகளை வைத்து, அவர்களின் ஆலோசனை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இடைத்தேர்தல் தேவைற்ற ஒன்று. இதனால் மக்களுக்கும், அங்கு பிரசாரத்தில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு நேரம் விரயம்.

ரூ.1 லட்சம் கோடி இழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200 கிரானைட் குவாரிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அலுவலர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்ற வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் வரை செயல்படுத்த வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பேட்டியின் போது பா.ம.க. மாநில கவுரவத்தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பொருளாளர் திலகபாமா, மாநில துணைத்தலைவர் மேகநாதன், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் இளங்கோ, ஆறுமுகம், கோவிந்தராஜ், கட்சி நிர்வாகிகள் மோகன்ராம், புல்லட் கணேசன், சுப.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story