விஷம் குடித்து மயங்கி கிடந்த காதல் ஜோடி
திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில், காதல் ஜோடி விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
காதல் ஜோடி
திண்டுக்கல் அருகே சிறுமலையில் உள்ள சிறுமலைபுதூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரும், மதுரை மேலூரை சேர்ந்த உறவினரான 17 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண், பிளஸ்-1 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
காதல்ஜோடி 2 பேரும், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தங்களது பெற்றோர்களிடம் வற்புறுத்தினர். அப்போது, 17 வயதில் திருமணம் முடித்தால் சட்டப்படி குற்றமாகும். எனவே பெண்ணுக்கு 18 வயது நிரம்பியவுடன் திருமணம் செய்து வைப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
விஷம் குடித்தனர்
இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இளம்பெண், தனது வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலன் செல்வத்தின் வீட்டிற்கு வந்தார். இதனை அறிந்த அவரது பெற்றோர், சிறுமலைபுதூருக்கு சென்று தங்களுடன் வருமாறு அந்த இளம்பெண்ணை அழைத்தனர். இதனை ஏற்க மறுத்த இளம்பெண், அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் அவரது பெற்ேறார் திரும்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே செல்வம், தனது காதலியுடன் நேற்று சிறுமலை புதூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அப்போது நம்மை குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என எண்ணிய காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
தீவிர சிகிச்சை
அதன்படி, அங்கு 2 பேரும் விஷத்தை குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதற்கிடையே வனப்பகுதி வழியாக வந்த விவசாயிகள் சிலர், காதல் ஜோடி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன், காதல் ஜோடியை விவசாயிகள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுமலை வனப்பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.