"கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கில் காதல் கணவர் கைது" - கலெக்டரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
“கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கில் காதல் கணவரை கைது செய்து உள்ளனர்” என்று தென்காசி கலெக்டரிடம் இளம்பெண் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மலம்பாட்டை தெருவை சேர்ந்தவர் சுபாஷ் மனைவி சண்முக பிரியங்கா (வயது 22). இவர் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் கடையநல்லூரை சேர்ந்த சுபாஷ் என்ற சிவில் என்ஜினீயரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இதைத்தொடர்ந்து நான் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறுத்தி விட்டேன். எனது கணவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்காக கடந்த 11-ந்தேதி சென்றிருந்தார். நேர்முகத்தேர்வு முடிந்ததும் அவர் கோவையில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
ஆனால் நான் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், எனது உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில் இருப்பதாலும் அவரை வீட்டுக்கு வருமாறு கூறினேன். இதற்காக அவருக்கு சேலத்தில் இருந்து பஸ்சில் கடையநல்லூர் வர டிக்கெட் பதிவு செய்தேன். அதன்படி அவர் சேலத்தில் இறங்கி பஸ்சில் ஏறி, காலை 7-50 மணிக்கு கடையநல்லூர் பஸ் நிலையத்தில் வந்திறங்கினார். பின்னர் அவர் ஆட்டோவில் ஏறி 8 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
அப்போது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் எங்களது வீட்டின் முன்பு வந்து நின்றனர். அவர்கள் எனது கணவரை வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். நான் போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கதவு அடைக்கப்பட்டு இருந்தது. என்னிடம் போலீசார் எதற்காக எனது கணவரை அழைத்து சென்றார்கள் என்று மாலை 5-30 மணி வரை கூறவில்லை.
பின்னர் போலீசார் என்னை அழைத்து அவர் மீது வழக்கு உள்ளது என்று கூறினார்கள். நான் என்ன காரணத்திற்காக என்று கேட்டபோது அவர்கள் எனது கணவர் சுபாஷின் பையில் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்ததாக கூறினார்கள். பின்னர் இரவு 7-30 மணிக்கு அவரது பையில் கஞ்சா இல்லை என்றும், உங்களது வீட்டின் பின்புறம் இருந்து எடுத்தோம் என்றும் கூறினார்கள். எங்களுக்கும், இந்த கஞ்சாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினோம்.
நாங்கள் இருவரும் திருமணம் செய்தபோது கஞ்சாவை வைத்து எனது கணவரை கைது செய்ய வைப்பதாக கூறி இருந்தனர். அதை நாங்கள் போனில் பதிவு செய்துள்ளோம். அதன்பிறகு ஒரு போலீஸ் அதிகாரி என்னை அழைத்து, உனது கணவரை கஞ்சா தனக்குரியது தான் என்று ஒப்புக்கொள்ள சொல் எனக் கூறினார். எனது கணவரை கஞ்சா தனக்குரியதுதான் என்று என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். பின்னர் எனது கணவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்று விட்டனர். என்னிடம் இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை.
நான் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மீது சத்தியமாக கூறுகிறேன், இந்த கஞ்சாவிற்கும், எனது கணவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதன் பின்னணியில் சில நபர்கள் போலீசில் செல்வாக்கு படைத்தவர்களாக இருக்கிறார்கள். எனவே பொய்யாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.