காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஜீயபுரம்:
காதல் திருமணம்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் அண்ணாவி கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகள் சுஜித்ரா(வயது 21). இவர், உப்பிலியபுரம் உக்கரை பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி சுஜித்ரா, தனது தந்தை பழனியப்பனிடம் செல்போனில் கூறி, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பழனியப்பன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுஜித்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார், அங்கு சென்று சுஜித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜித்ராவிற்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் இது சம்பந்தம் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளத்தில் தவறி விழுந்தவர் சாவு
*திருச்சி கல்யாணசுந்தரபுரம் சங்கரநாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஒண்டிமுத்து(60). கொத்தனார். இவரது வீட்டின் முன்பு கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் உடைந்து இருந்துள்ளது. இதை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நேற்று முன்தினம் இரவு அவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
*கர்நாடக மாநிலம் தக்கனா புத்தூர் பகுதியை சேர்ந்த முகமது(75) தனது குடும்பத்தினருடன் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு வழிபாடு செய்ய வந்தார். அங்கு அனைவரும் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்த போது, முகமதுவை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கிவில்லை. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமியாரை தாக்கிய வாலிபர்
*திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்த தவசுவின்(52) மகள் பவித்ராவை தென்னூரை சேர்ந்த சரவணன்-சுமதி தம்பதியின் மகன் அரவிந்த் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பவித்ராவும், அரவிந்தனும் பிரிந்து வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் சுமதி, அரவிந்த் ஆகியோர் தவசுவை திட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாய்-மகன் மீது செசன்சு கோர்ட்டு போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
*பெரம்பலூர் மாவட்டம் சொக்கநத்தம் பகுதியை சேர்ந்த சூரியபிரகாசம்(35), திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது பஸ்சில் வந்த 2 வாலிபர்கள் அவருடைய சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ திருடினர். உடனே சுதாரித்த அவர், 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (45), வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (50) என்பது தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.