காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
திருவட்டார் அருகே உள்ள முட்டைக்காடு புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 27). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் உறவுக்கார பெண்ணான நாகர்கோவிலை சேர்ந்த பாலகார்த்திகா (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வாக்குவாதம்
வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்த அருண்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக அருண்குமாருக்கும், பால கார்த்திகாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் அருண்குமார் மனைவியிடம் 'திருமணத்தின் போது நீ என்ன நகை கொண்டு வந்தாய்?' எனக் கேட்டதோடு, மனைவியையும், பிள்ளைகளையும் வெளியே தள்ளி கதவை பூட்டிக்கொண்டார்.
வாலிபர் தூக்கில் பிணம்
இதையடுத்து பாலகார்த்திகா குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் நாகர்கோவிலில் உள்ள தனது தாயார் சாருமதியின் வீட்டுக்கு சென்று விட்டார். அருண்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மறுநாள் வெகுநேரமாகியும் அருண்குமாரின் வீட்டுக்கதவு திறக்கப்படவில் லை. மேலும் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாக வீட்டு உரிமையாளர், பால கார்த்திகாவை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே பால கார்த்திகாவும், அவரது தாயார் சாருமதியும் வீட்டில் வந்து பார்த்த போது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் உரிமையாளரின் உதவியுடன் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது குளியலறையில் அருண்குமார் தூக்கில் ெதாங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சோகம்
இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.