கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
கடத்தூர்
கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
காதல் மலர்ந்தது
கோபி அருகே உள்ள பச்சமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பூமணிகண்டன் (வயது 25). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு மளிகை பொருட்கள் ஏஜென்சி நடத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மகள் ஜனனிபிரியா (21).
இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.
ஜனனிபிரியாவுடன் பூமணிகண்டனின் தங்கையும் படித்து வருவதால், ஜனனிபிரியா அடிக்கடி பூமணிகண்டன் வீட்டிற்கு சென்று வந்தார். இதனால் பழக்கம் ஏற்பட்டு பூமணிகண்டனும், ஜனனிபிரியாவும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
தஞ்சம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பச்சமலை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கூட்டுறவு சங்க செயலாளர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகள் ராகவி (18). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவருடைய மகன் பன்னீர்செல்வம் (23). என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு பெரிச்சிகவுண்டன் புதூரில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை வெட்டு வெளியேறி கோபி பவளமலை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
பேச்சுவார்த்தை
அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா 2 காதல் ஜோடிகளின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மணமகன்களின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் மணமகள்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.