பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
காதல் ஜோடி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மளூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 18). இவரும், 16 வயது சிறுமி ஒருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தபோது காதலித்து வந்தனர்.
இவர்களுடைய காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 28-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற இருவரும் தலைமறைவாகினர்.
விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அண்ணன் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தங்களுடைய உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரின் வீட்டாரும் பல்வேறு இடங்களில் அவர்களை தேடினர்.
இந்த நிலையில் நேற்று முத்துப்பேட்டை அருகே பாண்டி கோட்டகம் பகுதியில் சுடுகாடு அருகே இருவரும் பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்ததை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பரிதாப சாவு
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவருடைய உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அந்த கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.