பஞ்சப்பள்ளி அருகே காதுகள் அறுக்கப்பட்ட கள்ளக்காதலி சாவு-கைதான பூசாரி பரபரப்பு வாக்குமூலம்


தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே காதுகள் அறுக்கப்பட்ட கள்ளக்காதலி பலியானார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பூசாரி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவில் பூசாரியுடன் கள்ளக்காதல்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள கங்கப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பையன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 52). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தேன்கனிக்கோட்டையில் மனைவியுடன் தங்கி இருந்து, ஓசூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சின்னப்பையன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் ஜெயலட்சுமி கங்கப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார். இதனிடையே அவருக்கு, கூத்தப்பாடியை சேர்ந்த கோவில் பூசாரி மாதன் (64) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வேறொரு நபருடன் தொடர்பு

இந்த பழக்கத்தை வைத்து பூசாரி மாதன் அடிக்கடி ஜெயலட்சுமியிடம் பணம் கேட்டு வந்துள்ளார். இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாதன், அவரிடம் பணம் கேட்டார். ஆனால் ஜெயலட்சுமி அவருக்கு பணம் கொடுக்காமல், தான் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை தனது மகனிடம் கொடுத்தார். இதை அறிந்த மாதன் ஜெயலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலட்சுமிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால், மாதன் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்த பழக்கத்தை அவர் கண்டித்து வந்தார்.

காதுகள் அறுப்பு

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் தேடியபோது, அவர் அருகில் உள்ள வயல்வெளியில் தலையில் பலத்த காயத்துடனும், காதுகள் அறுக்கப்பட்ட நிலையிலும் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோவில் பூசாரி மாதன், ஜெயலட்சுமி காதுகளை அறுத்தும், அவரை கம்பியால் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

விசாரணையில் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலட்சுமியுடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மேலும் அவரிடம் செலவுக்கு பணம் பெற்று வந்தேன். கடந்த மாதம் 27-ந் தேதி வயல் வெளியில் அவரை சந்தித்தேன். அப்போது அவரிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை. மேலும் அவருக்கு வேறொரு நபருடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கேட்டபோது, எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நான், அங்கே கிடந்த இரும்பு கம்பியால் ஜெயலட்சுமியை தாக்கினேன். அப்போது அவர் தலையில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து, கத்தியால் அவருடைய காதுகளை அறுத்து கம்மல் மற்றும் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதையடுத்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் மாதனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து கம்மல்கள், தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் காதுகள் அறுக்கப்பட்ட பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story