குறைந்த அழுத்த மும்முனை மின்சாரம்; கயிறு தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு


குறைந்த அழுத்த மும்முனை மின்சாரம்; கயிறு தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு
x

சேதுபாவாசத்திரம் பகுதியில் குறைந்த அழுத்த மும்முனை மின்சாரம் காரணமாக கயிறு தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் குறைந்த அழுத்த மும்முனை மின்சாரம் காரணமாக கயிறு தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ெ்தாழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது.

கயிறு தொழிற்சாலைகள்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், நாட்டாணிக்கோட்டை, பூக்கொல்லை, ரெட்டவயல், குருவிக்கரம்பை, நாடியம், பட்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெண்கள் குடும்பம் நடத்த பயன்படுத்தி வருகிறார்கள்.

மும்முனை மின்சாரம்

இந்த பகுதியில் உள்ள கயிறு தொழிற்சாலைகளுக்கு கழனிவாசல் உயர் அழுத்த மின் பாதையிலிருந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் கயிறு தொழிற்சாலைகளுக்கு தேவையான அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

மேலும், குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரமே வழங்கப்படுவதால் எந்திரங்கள் பழுதடைந்து வருவதாகவும் கயிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து, நாட்டாணிக்கோட்டை கயிறு தொழிற்சாலை உரிமையாளர் குமணன் கூறியதாவது:-

சிரமங்கள்

கஜா புயலுக்கு பிறகு பல்வேறு சிரமங்களை சந்தித்து கயிறு தொழிற்சாலைகளை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் குறித்த நேரத்தில் உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதில்லை. மின்சார தட்டுப்பாடு காரணமாக தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்தும், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளது குறித்தும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசினோம்.

உயர் அழுத்த மின்சாரம்

அப்போது இரவு 10 மணி முதல் உயர் அழுத்த மும்முனை மின்சாரம் வழங்குவதாக உறுதி அளித்தனர். ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. தினசரி மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை உயர் அழுத்தம் மின்சாரம் தருவதாக மீண்டும் உறுதி அளித்தனர். பின்னர் இரவு 10 முதல் அதிகாலை 6 மணி வரை தருவதாக சொன்னார்கள். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

தற்போது நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே போல் மதியம் 1 மணி முதல் 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. எந்த நேரத்தில் மின்சாரம் வருகிறது, எப்போது நிறுத்துவார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது.

தொழிலாளர்கள் காத்திருப்பு

இதனால் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல், காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் தங்குவதிலும், வீடு திரும்புவதிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் நிலை உள்ளது.

மின்சாரம் வரும் நேரம் முறைப்படுத்தப்படாததால், தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பலர் வேறு வேலை தேடி சென்று விட்டனர்.

எந்திரங்கள் பழுது

மேலும் கயிறு தொழிற்சாலையை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. கடந்த கோடை காலத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் மாற்றி மாற்றி வாராவாரம் ஷிப்ட் முறையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

நேரத்தை முறைப்படுத்தி பகலிலேயே வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அதுவும் எந்த நேரங்களில் மின்சாரம் வருகிறது என்பது தெரியாத நிலை உள்ளது. மேலும் மும்முனை மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக வருவதால் எந்திரங்கள், மோட்டார்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு

குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நேர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைந்து வருவதாகவும் கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

விவசாய பணிகள்

மேலும், ஆழ்துளைக் கிணறு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் சாகுபடியும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். தமிழக அரசு விவசாய பணிகளுக்கு தடை இல்லாமல் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என அறிவித்துள்ள போதிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 8 முதல் 12 மணி நேரம் வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

அதுவும் குறைந்த அழுத்த மின்சாரமாக வழங்கப்படுவதால் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மும்முனை மின்சார வினியோகத்தை முறையாக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story