குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் வக்கீல் சுரேந்தர் பேசினார். கூட்டத்தில், தமிழக அரசு ரூ.75.95 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை அண்மையில் அறிவித்தது. இத்திட்டத்தில் ஒரு விவசாயி ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு மட்டுமே விவசாய இடுபொருள்களை பெற்று பயனடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தை ஒரு ஏக்கர் என்ற அளவில் இருந்து ஒரு எக்டேர் என அதிகரித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். குறுவை பாசனத்துக்காக குறித்த நேரத்தில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.