லோயர்கேம்ப்-குமுளிமலைப்பாதையில் கீேழ விழுந்து குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதம்:வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் குவிலென்ஸ் கண்ணாடிகள் கீழே விழுந்து சேதமடைந்தன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குமுளி மலைப்பாதை
கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் குமுளி மலைப்பாதை உள்ளது. கேரள மாநிலத்தின் சிறந்த சுற்றுலா தலங்களான தேக்கடி, இடுக்கி அணை ஆகிய இடங்களை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர். மேலும் தமிழக பகுதிகளில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் ஜீப், கார்கள் இந்த மலைப்பாதை வழியாக தான் பயணிக்கின்றனர்.
இந்த மலைப்பாதையில் அதிகளவு கொண்டை ஊசி வளைவுகள், சில இடங்களில் மலைப்பாதைகள் குறுகலாக உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கிறது. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் மாதாகோவில் வளைவு, கொண்டை ஊசி மீனா வளைவு, இரைச்சல் பாலம், 3-வது மேம்பாலம் வளைவு ஆகிய 4 இடங்களில் விபத்துகளை தடுக்க குவிலென்ஸ் கண்ணாடி வைத்தனர்.
குவிலென்ஸ் கண்ணாடி சேதம்
இந்நிலையில் சில இடங்களில் வைக்கப்பட்ட குவிலென்ஸ் கண்ணாடிகள் கீழே விழுந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதன்காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து போலீசாரோ அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ பயன்பாடு இல்லாமல் கீழே விழுந்து கிடக்கும் குவிலென்ஸ் கண்ணாடியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.