அக்டோபர் மாதம், சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அக்டோபர் மாதம், சென்னையில் புலிகள் உச்சி மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

மத்திய அரசுடன் இணைந்து சென்னையில் அக்டோபர் மாதம் புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

நாட்டில் வன விலங்குகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் தேசிய விலங்கான புலி இனம் அழிந்துவிடாமல் இருப்பதற்காக தனி கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு வனப்பகுதிகளில் புலிகள் சரணாலயம் இயங்கி வருகிறது. இந்திய வனப்பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 264 புலிகள் இருக்கின்றன. இதில் தமிழக வனப்பகுதிகளில் மட்டும் 26 புலிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச புலிகள் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி இந்தியாவில் உள்ள 264 புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக வருகிற அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை உலகமே உற்று நோக்கும் வகையில் சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று வரும் வேளையில், சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலகளாவிய புலிகள் உச்சி மாநாடும் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ஏற்பட்டுள்ளது.


Related Tags :
Next Story