மயிலம் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
மயிலம் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்தனா்.
மயிலம்,
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் இரவு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 22 பேர் பயணம் செய்தனர். பஸ்சை சென்னை ரெட்ஹில்ஸ் அண்ணா தெருவை சேர்ந்த ராசையா மகன் ராபின் சிங் (வயது 53), என்பவர் ஓட்டினார். பஸ் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கன்னிகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ராபின் சிங்கின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் வெங்கடேசன்(57), தூத்துக்குடி சோலை தெற்கு தெரு பாலசுப்பிரமணியன், மார்த்தாண்டம் தேங்காய்பட்டினம் சங்கரன் மகன் வினோத்குமார் (44), கன்னியாகுமரி மாவட்டம் கொல்லிமலை மாதவரம் பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் ராஜேந்திரன் (45) உள்பட 15 பேர் காயமடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.