தண்டவாளத்தில் பிணமாக கிடந்த அரிசி ஆலை அதிபர் மனைவி


தண்டவாளத்தில் பிணமாக கிடந்த   அரிசி ஆலை அதிபர் மனைவி
x

வடமதுரை அருகே, அரிசி ஆலை அதிபர் மனைவி தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

திண்டுக்கல்

அரிசி ஆலை அதிபர் மனைவி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அத்திக்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். அரிசி ஆலை அதிபர். அவருடைய மனைவி உமாராணி (வயது 37). இந்த தம்பதிக்கு பாலகிருஷ்ணன் (14) என்ற மகனும், பிரமிஷா (12) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று ஏற்பட்ட தகராறில் தனது கணவரிடம் கோபித்து கொண்டு உமாராணி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து கண்ணன் அவரை தேடினார். இதற்கிடையே உமாராணி அத்திக்குளத்துப்பட்டி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

கணவரிடம் விசாரணை

இதுகுறித்து உமாராணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் அத்திக்குளத்துப்பட்டிக்கு விரைந்தனர். பின்னர் இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனக்கும், தனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற உமாராணி ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்ததாகவும், அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றால் பிரச்சினை ஆகிவிடும் என்று நினைத்து, அங்கேயே நகர்த்தி போட்டு விட்டு உமாராணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகவும் போலீசாரிடம் கண்ணன் தெரிவித்தார்.

சாவில் சந்தேகம்

இந்த சம்பவம் தொடர்பாக, திண்டுக்கல் லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த உமாராணியின் அண்ணன் ஆத்மநாதன் (41), ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

அதில், எனது தங்கை உமாராணியிடம் வரதட்சணை கேட்டு கண்ணன் கொடுமைப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் தலையில் காயங்களுடன் தண்டவாளத்தில் உமாராணி பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் முன் பாய்ந்து உமாராணி தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story