பிணம் போல் படுத்து கிடந்துசுயேச்சை வேட்பாளர் நூதன பிரசாரம்


பிணம் போல் படுத்து கிடந்துசுயேச்சை வேட்பாளர் நூதன பிரசாரம்
x

நூதன பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.வினர், தே.மு.தி.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சுயேச்சையாக போட்டியிடுபவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் போட்டி போட்டி பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் பொதுசெயலாளர் ஆறுமுகம் என்பவர் சுயேச்சை வேட்பாளராக 'டம்ளர்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் தனது கழுத்தில் ரோஜா பூ மாலை மற்றும் வாய்க்கட்டு கட்டிக்கொண்டு பிணக்கோலத்தில் படுத்து கிடந்தபடி வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். இதை பலரும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். இதுகுறித்து ஆறுமுகம் கூறுகையில், 'டாஸ்மாக் மதுவால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை எடுத்துக்கூறவே பிண கோலத்தில் வாக்கு கேட்கிறேன். நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றால் டாஸ்மாக் மதுவினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண்களுக்கு விதவை சான்றிதழ் வழங்கிடவும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்று தரவும் நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


Next Story