மண் அள்ளிய பொக்லைன் எந்திர ஆபரேட்டர் கைது
ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திர ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பையில் உள்ள ஈஸ்வரன் கோவில் பனங்காட்டுக்காடு பகுதியில் அரசு அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த நபர்களை அதிகாரிகள் பிடித்து, ராஜதானி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் கொடுத்த புகாரின் பேரில் பொக்லைன் எந்திர ஆபரேட்டரான காமாட்சிபுரத்தை சேர்ந்த ராஜீவ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திர உரிமையாளர் மற்றும் நிலத்தின் உரிமையாளரான பாலக்கோம்பையை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.