'குடிநீர் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் வேண்டும்'
குடிநீர் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் வேண்டும் என்று மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடிநீர் ஆதாரம்
மடத்துக்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ரங்கநாதன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மடத்துக்குளம் பேரூராட்சியின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் செங்கழனிபுதூர் பகுதியில் 6 ஆழ்துளைக்கிணறு மின்மோட்டார்கள் மற்றும் குடிநீர் சேமிப்புத் தொட்டியிலிருந்து 2 மின் மோட்டார்கள் மூலம் நால்ரோட்டிலுள்ள மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது.
அங்கிருந்து பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த மின் மோட்டார் இணைப்பு விவசாய மின் இணைப்பில் உள்ளதால் குறைந்த நேரமே மோட்டாரை இயக்க முடிகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 7-வது வார்டு பகுதியில் பன்றி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பயிர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பன்றிகள் கடிக்கிறது. எனவே பன்றிக் குடில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வாக்குவாதம்
கிருஷ்ணாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு தென்புறம் புதிய நிழற்குடை அமைத்துத்தரவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 6-வது வார்டு உறுப்பினர் கணேசன் தனது வார்டில் பணிகள் எதுவும் நடப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் கோரிக்கைகள் குறித்து பேசியபோது குறுக்கிட்ட 16-வது வார்டு உறுப்பினர் ஆறுமுகம் அவரவர் முறை வரும்போது பேசுங்கள் என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த துணைத்தலைவர் ரங்கநாதன் முயன்றார். ஆனால் கணேசன் அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டதால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வராததால் கூட்டத்தை விட்டு வார்டு உறுப்பினர்கள் வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய தலைவர் தனது அறையிலேயே அமர வைத்து கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.