போலி பத்திரப்பதிவு திருத்த சட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
போலி பத்திரப்பதிவு திருத்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப் பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் "மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், பத்திரப் பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும். மாவட்டப் பதிவாளர்களுக்கே அதிகப்படியான அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.