மடத்துக்குளம் துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்


மடத்துக்குளம் துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம்
x
திருப்பூர்


துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் வேண்டும் என்று மடத்துக்குளம் வட்டார சுகாதாரப் பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணிகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வட்டார சுகாதாரப் பேரவை கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டார தலைமை மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மேலும் மடத்துக்குளம் வட்டாரத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளுக்குத் தேவையான கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை மையங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தவகையில் அரியநாச்சிபாளையம், மடத்துக்குளம், குப்பம்பாளையம் பகுதிகளில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த இடம் மற்றும் கட்டிடம் வேண்டும்.குமரலிங்கம், கணியூர் பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டிடம் அமைத்துத் தர வேண்டும்.கடத்தூர், காரத்தொழுவு, ஆர்ஜிபுதூர், துங்காவி, மைவாடி, கொழுமம், பாப்பான்குளம், நீலம்பூர், ருத்ராபாளையம், போத்தநாயக்கனூர், சாமராயப்பட்டி பகுதிகளில் பழுதடைந்துள்ள கட்டிடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ அலுவலர் குடியிருப்பு

சோழமாதேவி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச் சுவர் அமைத்துத் தர வேண்டும்.பாப்பான்குளம், துங்காவி பகுதிகளில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு அமைக்க வேண்டும்.கணியூரில் உள்ள குடியிருப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் கூட்டத்தில் வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவியா ஐயப்பன், துணைத் தலைவர் ஈஸ்வர சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பால செந்தில், தீபிகா முருகானந்தன், நதீரா கண்ணாடி பாபு, திவ்ய பாரதி ராஜேஷ், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் மடத்துக்குளம் கலைவாணி பாலமுரளி,

கணியூர் செந்தமிழ் செல்வி, குமரலிங்கம் சர்மிளா பானு, துணைத் தலைவர் அழகர்சாமி, எஸ்பிஎச்ஐ உதவி இயக்குனர் கோவிந்தராஜ், உதவி திட்ட மேலாளர் மோகன்ராஜ், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலர் சீனிவாசன், மாவட்ட மலேரியா அலுவலர் காசிம் முஸ்தபா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் செல்வராஜ், தொற்றா நோய்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர்

பாபு சுதாகர், டாக்டர்கள், சமுதாய நல செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் குடிநீர் வடிகால் வாரியம், கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Next Story