மதுரை, ராமேசுவரத்தில் வானில் மேகமூட்டம்: சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம்
மதுரை, ராமேசுவரத்தில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை, ராமேசுவரத்தில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்திர கிரகணம்
பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனின் நேரடியான ஒளியைப்பெற இயலாது போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம்.
சந்திர கிரகணத்தின்போது சூரியனின் எதிர்த்திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழுநிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணமாகும்.
பகுதி சந்திர கிரகணத்தின்போது நிலவின் ஒரு பகுதியில் முழுநிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. எனவே நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். இது பகுதி சந்திர கிரகணமாகும்.
திடீர் மழை
பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து நேற்று ஒரே நேரத்தில் காண முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி நேற்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைந்தது. இதில் முழு சந்திர கிரகணம் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணி வரை இருந்தது. உச்சபட்சமாக 4.30 மணிக்கு ஏற்பட்டது.
நேற்று மாலை 5.36 மணிக்கு சூரியன் மறைந்து அதற்கு பிறகு மாலை 5.40-க்கு சந்திரன் உதயமானது. ஆனால் அந்தநேரத்தில் மதுரை, ராமேசுவரம் உள்பட பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்ககள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் சென்னையில் லேசான மழை இருந்ததாலும், அங்கும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும் பார்க்க முடியவில்லை.
பிர்லா கோளரங்கம்
சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த தொலைநோக்கு கருவி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் கிரகணத்தை காண முடியவில்லை. ஆர்வமுடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆனால் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெரிந்த சந்திர கிரகணம், பிர்லா கோளரங்கத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது என்று பிர்லா கோளரங்க இயக்குனர் (பொறுப்பு) சவுந்தரராஜ பெருமாள் கூறினார்.
மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி தமிழகத்தில் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.