பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை வாலிபர்


பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை வாலிபர்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதுரை வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

பெண் என்ஜினீயர்

நாகர்கோவிலைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இரவுப்பணி முடிந்து இவர் தினமும் பஸ்சில் நாகர்கோவிலுக்கு வருவது வழக்கம். இதேபோல் நேற்று காலையிலும் இவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட கேரள மாநில அரசு பஸ்சில் ஏறி நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தூங்கியபடி வந்ததாக தெரிகிறது.

அந்த பஸ் நாகர்கோவில் ஆவின் பால்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது, பெண் என்ஜினீயர் இருக்கையின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபர், அவரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவர் உடனே கூச்சல் போட்டு, பஸ்சில் இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் கூறினார். இதையடுத்து பஸ்சில் இருந்தவர்கள் அந்த வாலிபரை தட்டிக்கேட்டனர். சிலர் அந்த வாலிபருக்கு தர்ம அடியும் கொடுத்தனர்.

ஐ.டி. நிறுவன அதிபர்

இதற்கிடையே பெண் என்ஜினீயர் தனது குடும்பத்தினருக்கும், கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடி விடாதபடி பார்த்துக் கொண்டனர். பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் வந்தடைந்ததும், கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் கொடுத்ததின்பேரில் வடசேரி புறக்காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரை பிடிப்பதற்காக தயார் நிலையில் இருந்தனர். பெண் என்ஜினீயரின் சகோதரர்களும் அங்கு வந்திருந்தனர்.

பஸ் நின்றதும் பஸ்சில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவருடைய சொந்த ஊர் மதுரை என்பதும், மதுரையில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருவதும், இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் நடந்ததும் தெரிய வந்தது. வாலிபரின் ஐ.டி. நிறுவனத்தை அவருடைய மனைவிதான் நிர்வகித்து வருகிறார்.

எச்சரித்து அனுப்பினர்

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் குடும்பத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். போலீசார் தகவல் தெரிவித்தபிறகுதான் அவருடைய குடும்பத்தினருக்கு இந்த வாலிபர் நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. அதுவரை அந்த வாலிபர் மதுரையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில்தான் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறிவிடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதேபோல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும்போதுதான் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டது போலீசார் விசாரணையின்போது தெரிய வந்தது.

பின்னர் பெண் என்ஜினீயர் இதுதொடர்பாக புகார் கொடுக்க முன்வராததால் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து, ஊருக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே புதுமாப்பிள்ளையான இந்த வாலிபர், பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story