மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை
மதுரை மத்திய சிறையில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
மதுரை மத்திய சிறை
மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுபோல், பெண் கைதிகளுக்கும் தனி வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், சிறை கைதிகள் வழக்கு விசாரணைக்காக வெளியே சென்று வரும் போது தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை எடுத்துவருவதாக புகார்கள் வந்தது. நேற்று முன்தினம், தண்டனை கைதியான பாபு என்பவர், தோட்ட வேலையில் ஈடுபட்டபோது, வெளி நபர்களிடமிருந்து கஞ்சாவை பெற்று மற்ற கைதிகளுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சோதனை
இதன் தொடர்ச்சியாக, மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் குறித்து சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை மதுரை மத்திய சிறைச்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள், சிறைவளாகத்தில் உள்ள கைதிகள் அறைகள், உணவு தயாரிக்கும் இடம், கழிவறை, தோட்டம் என எல்லா இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதுபோல், பெண் கைதிகளின் அறைகளிலும் சோதனை நடந்தது. பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.