மதுரை தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் தேங்கும் மழைநீர்
மதுரை மாநகராட்சி 36-வது வார்டு பகுதியில் சிறிய மழை பெய்தால்கூட சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். பூமணி, மதுரை.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை தெற்கு 46-வது வார்டு காமராஜபுரம், பகவத்சிங் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன், மதுரை
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் டி.அய்யங்கோட்டை அப்பேத்கர் தெருவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பெண்கள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தூர தேவி, டி.அய்யங்கோட்டை.
பாதாள சாக்கடை பணி
மதுரை சர்வேயர் காலனி வார்டு எண் 11 பாண்டியன் நகர் 8-வது தெருவில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
மின்விளக்கு வசதி வேண்டும்
மதுரை ஆரப்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைகீழ் பாலத்தின் அடியில் எந்தவித மின்சார விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகளுடன் செல்வோர், பெண்கள் ஒருவித அச்சம் அடைகின்றனர். திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திர பிரகாஷ், மதுரை.