பசுவின் வயிற்றில் 50 கிலோ பாலித்தீன் - அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மதுரை டாக்டர்கள்
மதுரையில் பசுவின் வயிற்றில் இருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
மதுரையில் பசுவின் வயிற்றில் இருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
உடல் நலக்குறைவு
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு சொந்தமான பசுவுக்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமடையவில்லை. இதனை தொடர்ந்து அவர் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு மாட்டை அழைத்து வந்தார்.
கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தபோது, பசுவின் வயிற்றில் பாலித்தீன் பைகள் அதிக அளவில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை மூலம் பாலித்தீன் பைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் முதன்மை டாக்டர் வைரவசாமி தலைமையில் உதவி டாக்டர்கள் முத்துராமன், அறிவழகன், விஜயகுமார், முத்துராம் மற்றும் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்..
அப்போது, அந்த பசுவின் வயிற்றில் 50 கிலோவுக்கு மேல் பாலித்தீன் பொருட்கள், இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்ற பல பொருட்களும் இருந்தன. அவற்றை டாக்டர்கள் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது. தற்போது அந்த பசு தல்லாகுளம் பன்முக மருத்துவமனையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
50 கிலோ பிளாஸ்டிக்
இதுகுறித்து டாக்டர் வைரவசாமி கூறியதாவது:-
பசு சிகிச்சைக்காக வந்தபோது, வயிற்று பகுதியில் வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கும் என நினைத்தோம். ஆனால், அறுவை சிகிச்சை செய்த பின்புதான், அதன் வயிற்று பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக் பொருட்கள் கட்டி கட்டியாக இருந்தன. கிட்டத்தட்ட 50 கிலோவிற்கும் மேல் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பும் பசுமாட்டின் வயிற்றில் இருந்து 65 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி இருக்கிறோம்.
உணவகங்கள்
குறிப்பாக உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை குப்பை தொட்டியில் வீசுகிறார்கள். அந்த குப்பையை பசுக்கள் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இதனை தடுக்க வேண்டும்., ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, இலை, மஞ்சப்பை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாடுகளை பராமரிக்கும் விஷயத்தில் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை சரிவர அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே குப்பை தொட்டிகளில் பேடுவதால் மாடுகள் இந்த போன்றவற்றை பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.