"சீமைக்கருவேல மரங்களை தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அகற்றலாம்" மதுரை ஐகோர்ட்டு ஆலோசனை
நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க தடையாக உள்ள சீமைக்கருவேல மரங்களை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு ஆலோசனை வழங்கியது.
மதுரை,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் தொட்டியான்குளம் என்ற குளம் உள்ளது. இது, 88 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மொத்த கொள்ளளவு 46.30 லட்சம் கனஅடி ஆகும்.
மழைக்காலங்களில் சிற்றாற்றில் வெள்ளம் வரும்போது 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் வழியாக வந்து தொட்டியான்குளம் நிரம்பும். பின்னர் இங்கிருந்து மாறாந்தை குளத்துக்கு தண்ணீர் செல்லும். இதன் மூலம் 12 ஆயிரம் எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
இந்தநிலையில் சில ஆண்டுகளாக தொட்டியான்குளத்தை பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காததால், அதில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துவிட்டன. தற்போது கழிவுநீர், கழிவு பொருட்களும் கலந்து வருகின்றன.
இதன் காரணமாக குளத்தில் நீர்ப்பிடிப்பு வெகுவாக குறைந்து பாசனத்திற்கு போதிய நீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி, அந்த குளத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, முறையாக தூர்வாரி பராமரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் ஆலோசனை
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தொட்டியான்குளம் உள்பட தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் சேமிப்பதற்கு தடையாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அகற்றி பராமரிக்கலாமே? என ஆலோசனை வழங்கினர்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, தென்காசி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டெண்டர் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணி துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.