சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டிலேயே உத்தரவிட்டும் -போலீஸ் நிலையங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாதது ஏன்?- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டிலேயே உத்தரவிட்டும் போலீஸ் நிலையங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாதது ஏன்? என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டிலேயே உத்தரவிட்டும் போலீஸ் நிலையங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாதது ஏன்? என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான கடையை காலி செய்யும் விவகாரத்தில் திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று அவர் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.காந்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களில் 10.8.2022 அன்று முதல் 15.8.2022 வரை பதிவான காட்சிகளை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
15 நாட்கள் மட்டும்
அடுத்தகட்ட விசாரணையின் போது போலீஸ் நிலையத்தின் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 10.8.2022 முதல் 15.8.2022 வரையிலான பதிவுகள் இல்லை. இதுபற்றி கேட்டபோது, போலீஸ் நிலைய கேமரா பதிவுகள் 15 நாட்கள் வரை மட்டுமே சேமிக்க முடியும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் சம்பந்தமாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-
திட்ட அறிக்கை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் 820 போலீஸ் நிலையங்களில் 18 மாத பதிவுகளை சேமிக்கும் திறனுடன் என்.வி.ஆர். (நெட் ஒர்க் வீடியோ பதிவு) வசதி ஏற்படுத்த ரூ.18 கோடியும், முதல் கட்டமாக 251 போலீஸ் நிலையங்களில் பழைய கேமராக்களை மாற்றி அமைக்க ரூ.9.25 கோடியும் தேவை என திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதை உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு போலீஸ் டி.ஜி.பி. அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை குறித்த அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கூடுதல் செயலாளருக்கு உத்தரவு
இதையடுத்து நீதிபதி, போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு 2020-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருந்தும் இதுவரை இந்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் உள்துறை கூடுதல் செயலாளர் 6-வது எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி போலீஸ் நிலையங்களில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.