இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 25). இவர், பட்டதாரி இளம்பெண்ணை தனது வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வீடியோ எடுத்து, அந்த இளம்பெண்ணை மிரட்டி வந்தார்.
இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் ஆகி உள்ளது. சில நாட்களில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சுரேந்தர், பெண்ணின் வீட்டில் உள்ள 13 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மொய்ப்பணத்தையும் எடுத்துக்கொண்டு வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். அதன்படி நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றுள்ளார். அந்த பெண்ணை கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தற்போது தலைமறைவாக உள்ள சுரேந்தர், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தரப்பில் வக்கீல்கள் வேல்முருகன், சத்யம்சரவணன் ஆகியோர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
பின்னர் அவர்கள் வாதாடுகையில், ஏற்கனவே இந்த பெண்ணை காணவில்லை என அவரது தாயார் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது இளம்பெண் ஆஜராகி சுரேந்தர் தன்னை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று அலைக்கழித்ததாக ஐகோர்ட்டில் தெரிவித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இந்த சம்பவம் மற்றும் மோசடி குறித்து அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட்டுவிடம் ரகசிய வாக்குமூலத்தையும் இளம்பெண் அளித்து உள்ளார். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று வாதாடினார்கள்.
விசாரணை முடிவில் மனுதாரரின் முன்ஜாமீன் மனு ஏற்புடையதல்ல. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.