வடமாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த கோரும் நாம் தமிழர் கட்சி நடைபயணத்துக்கு அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வடமாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த கோரும்  நாம் தமிழர் கட்சி நடைபயணத்துக்கு  அனுமதி கேட்ட வழக்கு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

வடமாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த கோரும் நாம் தமிழர் கட்சி நடைபயணத்துக்கு அனுமதி கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜசேகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை கட்டுப்படுத்தி, முறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்க வேண்டும்.

கோவை வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தொடங்கி காயல்பட்டினம் வரை நடைபயணம் மேற்கொள்ளவும், பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்க கோரி மனு அளித்து இருந்தோம்.

இந்த நிகழ்ச்சியை கடந்த ஜனவரி மாதம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்து இருந்தோம். ஆனால் போலீசார் கடைசி நேரத்தில் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து வருகிற 18-ந்தேதி எங்களின் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கேட்டு மீண்டும் போலீசாரிடம் மனு அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே உடன்குடி முதல் காயல்பட்டினம் வரை நடைபயணம் மேற்கொள்ளவும், பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தரப்பு கோரிக்கைகளுக்கு அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய பிரச்சினை உள்ளதால் இந்த கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என வாதாடினார்.

இதனையடுத்து நீதிபதி, வட மாநில தொழிலாளர் பிரச்சினையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தமிழ்நாடு அரசின் வரன்முறைக்குள் வராது எனக்கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story