வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் சான்றிதழ்களுக்காக வாரியம் - மாவட்டந்தோறும் அமைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு உரிய சான்றிதழ்களை வழங்க மாவட்டந்தோறும் வாரியம் அமைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு உரிய சான்றிதழ்களை வழங்க மாவட்டந்தோறும் வாரியம் அமைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வாடகைத்தாய் குழந்தை
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரியதர்ஷினி, சதீஷ் திவாரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று எங்களுக்கு நெல்லை மாவட்ட மருத்துவக்குழு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
உயிரியல் காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு நவீன விஞ்ஞானம் உதவியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் மையங்கள் காளான்களாக பெருகி வருவதும், தொழில் வல்லுனர்களின் ஒரு பிரிவினரால் நெறிமுறையற்ற நடைமுறைகள் பரவுவதும், உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம் ஆகியவற்றை இயற்றுவதற்கு வழிவகுத்தது என்பது உண்மைதான்.
மாவட்ட வாரியம்
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் தம்பதிகள் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்த சட்டங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டங்கள் வணிக வாடகைத்தாய் முறையை தடை செய்கின்றன. இந்த சட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் கூட தங்கள் சிகிச்சை நடைமுறைகளை செய்ய முடியாது. ஏனெனில் இந்த சட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியவில்லை.
இந்த சட்டத்தின்படி, மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையே தேசிய வாடகைத்தாய் வாரியம் மற்றும் மாநில வாடகைத்தாய் வாரியங்களை, சட்டம் இயற்றப்பட்ட 90 நாட்களுக்குள் அமைத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அத்தகைய வாரியம் செயல்படுகிறதா? என்பது குறித்த தெளிவு இல்லை. இந்த சட்டங்களின் விதிகளை நடைமுறைப்படுத்தவும், செயல்படுத்தவும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இணை இயக்குனர்களை கொண்ட மாவட்ட ஆணையத்தை கடந்த செப்டம்பர் மாதம் நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மருத்துவ வாரியம் அமைப்பது.
விரைவான தீர்வு
அதாவது, ஏற்கனவே பல ஆண்டுகளாக குழந்தை செல்வத்துக்காக போராடிக்கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு, குழந்தை பேறுக்கான ஒரே வழி வாடகைத்தாய் மூலம் மட்டுமே என்பது வேதனையானது. அந்த தம்பதிகள் சட்டப்படியான நடைமுறைகளை செய்வது கூடுதல் சுமையாக உள்ளது. இதனை எளிதாக்க, வாடகைத்தாய் தொடர்பான சான்றிதழ்களை பெறுவதற்கு மாவட்டம் வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க வேண்டும். இந்த வாரியங்கள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகத்திலும் இருக்க வேண்டும்.
வாரியத்தின் அதிகாரிகள், உறுப்பினர்கள் அனைவரும் வாடகைத்தாய் சட்ட விதிமுறைகள், நடைமுறைகளை நன்கு அறிந்திருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்த வேண்டும். வாடகைத்தாய் சான்றிதழ் பெற விரைவான தீர்வு காணும் வகையில் அரசு நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும். மனுதாரரின் மனுவையும் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.