கரூரில் நடந்த சோதனையின்போது வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேர் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய மனு- போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கரூரில் நடந்த சோதனையின்போது வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில்  19 பேர் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்ய மனு- போலீசார் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேருக்கு கீழ்கோர்ட்டு அளித்த ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வருமானவரி அதிகாரிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மதுரை


கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேருக்கு கீழ்கோர்ட்டு அளித்த ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வருமானவரி அதிகாரிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வருமானவரி சோதனை

வருமான வரித்துறையின் உதவி இயக்குனர் யோக பிரியங்கா மற்றும் அதிகாரிகள் சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூரைச் சேர்ந்த அசோக்குமார், குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி உள்ளிட்ட சிலர் வருமான வரி முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர்களின் வீடுகளில் கடந்த மாதம் 25-ந்தேதி சோதனை நடத்தினோம். சோதனை நடந்த இடங்களுக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினோம்.

ஆனால் கூட்டத்தில் இருந்தவர்கள், மோசமான வார்த்தைகளில் திட்டினர். சிறிது நேரத்தில் நாங்கள் சோதனையில் ஈடுபட்ட இடத்திற்குள் நுழைந்த கூட்டத்தினர், எங்களை தாக்கினர்.

மேலும் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். அங்கு திடீரென கூட்டம் அதிகரித்தது. இதனால் நாங்கள் எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கிருந்து வெளியேறினோம். மறுநாள் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் உதவியுடன் அங்கு நாங்கள் சென்று, சோதனையை தொடர்ந்து நடத்தினோம்.

தாக்கியதாக வழக்கு

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதன்பேரில் அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீதான வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் அளித்தது ஏற்புடையதல்ல. எனவே 19 பேருக்கு கீழ்கோர்ட்டு ஜாமீன், முன்ஜாமீன் அளித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக கரூர் போலீஸ் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story