சாதிச்சான்றிதழ் கோரிய பெண்ணை அலைக்கழித்ததால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு- அதிகாரிகளிடம் வசூலிக்கவும் அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சாதிச்சான்றிதழ் கோரிய பெண்ணை அலைக்கழித்ததால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு- அதிகாரிகளிடம் வசூலிக்கவும் அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சாதிச்சான்றிதழ் கோரிய பெண்ணை அலைக்கழித்ததால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க அதிகாரிகளிடம் வசூலிக்கவும் என அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


கரூரை சேர்ந்த ஸ்ரேயா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் கரூர் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்தேன். நான் காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். எனவே எனக்கு காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எனது மனுவை வருவாய் அதிகாரி நிராகரித்துவிட்டார். எனவே அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து எனக்கு சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

1977-ம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி ஒருவர் நிரந்தர வசிப்பிடத்திலிருந்து சான்றிதழ்களை விண்ணப்பிக்க வேண்டும். இதில் நிரந்தர வசிப்பிடம் என்பது அவர்கள் நிரந்தரமாக தங்கி இருக்கும் இடத்தை குறிக்கிறது.

மாறாக அவர்களின் பூர்வீக பகுதியை குறிக்கவில்லை. எனவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் பெற்றோர் மற்றும் தாத்தா நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனினும் பல ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வருகிறது.

எனவே மனுதாரர் தனக்கு சாதிச்சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய்த்துறை அலுவலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரரின் விண்ணப்பத்தை வருவாய்த்துறை அலுவலர் பரிசீலனை செய்து 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் வருவாய் கோட்டாட்சியர் மனுதாரரை தேவையில்லாமல் அலைக்கழித்துள்ளார். எனவே மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அரசு சார்பில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Related Tags :
Next Story