உரிமையாளர் அனுமதி இன்றி பட்டா நிலத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதா?- வக்கீல்கள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
உரிமையாளர் அனுமதி இன்றி பட்டா நிலத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதா? என்று வக்கீல்கள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில் அனுமதி இன்றி தோண்டி மின் கம்பங்களை நட்டு வைத்து உள்ளனர். அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உரிமையாளர் அனுமதி இன்றி பட்டா நிலத்தில் மின் கம்பம் அமைத்ததால் எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், மின் கம்பம் நடப்பட்டுள்ள இடம் ஆனது, தனது பட்டா நிலம் என மனுதாரர் கூறுகிறார். இதை மின்வாரியம் தரப்பில் மறுக்கின்றனர்.
எனவே இது சம்பந்தமாக நேரில் ஆய்வு நடத்த வக்கீல் கமிஷனர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள், நிலக்கோட்டை தாசில்தார் உள்ளிட்டோர் மனுதாரர் முன்னிலையில் ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.