இளம்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை உறுதி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இளம்பெண் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
நெல்லையைச் சேர்ந்த கண்ணன் (வயது 39) என்பவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரும், அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அருகருகே வசித்து வந்தனர். இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி மனுதாரர் அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் இளம்பெண் கருவுற்றார். திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்திய போது, அவரின் சமூகத்தை குறிப்பிட்டு திருமணம் செய்து கொள்ள மனுதாரர் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே, இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கும், மனுதாரருக்கும் இடையே டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில், அந்த குழந்தை மனுதாரருக்கு பிறந்தது தான் என்பது உறுதியாகி உள்ளது. இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக போலியாக வாக்குறுதி அளித்து மனுதாரர், தனது இச்சையை தீர்த்துக் கொண்டது உறுதி ஆகிறது. எனவே இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் மனுதாரர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.