கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை- உள்ளாட்சி அமைப்புகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை- உள்ளாட்சி அமைப்புகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெர்லின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள காந்தி மண்டபம் முதல் கோவளம் கிராம நிர்வாக அலுவலகம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

தற்போது இந்த நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடற்கரையின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியவில்லை. இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் காந்தி மண்டபம் முதல் கோவளம் கிராம நிர்வாக அலுவலகம் வரை உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் கடைகளை அகற்றி, நடைபாதையை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிகமாக 168 கடைகளை இந்த பகுதியில் நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார் என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர, நடைபாதையை ஆக்கிரமித்து வேறு யாரும் கடை நடத்தினால் அதை அப்புறப்படுத்த வேண்டும். கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து, தூய்மையாக வைத்திருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Related Tags :
Next Story