அரசு புறம்போக்கு நிலங்களில் பனை மரங்களை வெட்டினால் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு புறம்போக்கு நிலங்களில் பனை மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு புறம்போக்கு நிலங்களில் பனை மரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டில் மனு
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா, சிறாய்குளம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. மேலும் சாயல்குடி, ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் பல ஆயிரம் பனை மரங்கள் இருக்கின்றன. பனை மரங்களில் இருந்து ஏராளமான பொருட்களை தயாரித்து கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த பனை மரங்கள் இருக்கும் பகுதிகள் அனைத்தும் அரசு புறம்போக்கு பகுதிகளாகும்.
ஆனால் தற்போது சிலர் தங்களின் சுய லாபத்திற்காக பனை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே கடலாடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பனை மரங்களை வெட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
பனை மரம் வெட்டினால் நடவடிக்கை
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடும் இடம் தனி நபருக்கு சொந்தமான இடம் என்பதால் ஏதும் செய்ய முடியாது என்றார்.
அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, அரசு புறம்போக்கு நிலத்திலும் பனை மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், தனியார் நிலம், பட்டா நிலங்களில் மரம் வெட்டப்படுவது குறித்து நாங்கள் ஏதும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், அரசு நிலங்களில் பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்து அரசு தரப்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.