அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- திருச்சி, லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் பிரதமர் திட்டத்தின் கீழ் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது வீடுகள் கட்டி மானிய தொகையையும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஒரே வீட்டை காண்பித்து பல்வேறு நபர்கள் மானிய தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இறந்தவர் பெயரை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யவும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, ஏழை மக்கள் பயனடைவதை உறுதிப்படுத்தும் வகையில், முறைகேடுகளை தடுக்க ஊரக மேம்பாட்டு துறையின் உதவி இயக்குனர் அல்லது உதவி கலெக்டர் தரத்திற்கு குறையாத அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது அரசின் திட்டங்கள் உரியவர்களை சென்றடையும் வகையிலான நேர்மறையான நடவடிக்கை ஆகும். அந்த வகையில் அவரது கடிதத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்ட கலெக்டர், உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் உரிய விசாரணையை நடத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி அலுவலர்கள் மீது திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.