பக்கத்து கிராமத்தில் இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாதவாறு மயானத்தை பூட்டி அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்களா?- கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பக்கத்து கிராமத்தில் இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாதவாறு மயானத்தை பூட்டி அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார்களா என்று கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த ரகுநாதன், தவராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தேனி மாவட்டத்தில் பொம்மையகவுண்டன்பட்டி, சுக்குவாடன்பட்டி ஆகிய கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த 2 கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் பொதுவானதாக சுக்குவாடன்பட்டியில் மயானம் இருக்கிறது. இந்த நிலையில் சுக்குவாடன்பட்டியை சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக மயானத்தை பூட்டி சாவியை வைத்துக்கொண்டனர்.
பொம்மையகவுண்டன்பட்டியல் இறந்தவர்களை தகனம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி, அங்கு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்ததால், அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை சுமூகமான நடவடிக்கை இல்லை. எனவே ஊராட்சிக்கு சொந்தமான மயானத்தை பூட்டி வைத்த தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம் போல, மயானத்தை அனைவரும் பயன்படுத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், மேற்கண்ட மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.