பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதித்த தனிநீதிபதி உத்தரவுக்கு தடை -மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நடவடிக்கை


பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதித்த தனிநீதிபதி உத்தரவுக்கு தடை -மேல்முறையீட்டு வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நடவடிக்கை
x

பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

மதுரை


பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி வழங்கும்படி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

சான்று வழங்க உத்தரவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த சக்கரவர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சங்கரன்கோவில் தாலுகா வீரிருப்பு கிராமத்தில் பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தேன். இதற்காக வருவாய் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் தடையில்லாச்சான்று பெற்று சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

தடையில்லா சான்று கேட்ட எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர். அந்த நடவடிக்கையை ரத்து செய்து, தடையில்லா சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு தனிநீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல. தடையில்லாச்சான்று கேட்ட விண்ணப்பத்தை நிராகரித்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு தடையில்லாச்சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வழிகாட்டுதல்கள்

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலாளர், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகியோர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வக்கீல் திரவியம் ஆஜராகி, பெட்ரோலியத்துறையானது மத்திய அரசின் வசம் உள்ளது. ஆனால் இடவசதிகள், பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தடையில்லாச்சான்றை மாநில அரசின் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறையினரிடம் பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. பெட்ரோல் பங்க் தொடங்கப்படும் நிலம் தகுதியானதா என்றும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில் வீரிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பெட்ரோல் பங்க் நடத்த அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இடைக்கால தடை

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story