மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி, மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
விழா என்றாலே பூக்கள்தான் பிரதானம். விழாக்காலங்களில் மதுரை மல்லிகைப்பூவுக்கு தனி கிராக்கிதான்.
மதுரையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மல்லிகைப்பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகைப்பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்திருந்தது. குறிப்பாக, மல்லிகையின் விலை கணிசமாக உயர்ந்து இருந்தது. அதாவது, ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.1,200-க்கு விற்பனையானது.
நேற்று காலை முதலே மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை பொருட்படுத்தாமல், மக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.
எதிர்பார்த்த விலை இல்லை
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், "கடந்த வாரத்தில் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு ரூ. ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. தற்போது பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல், பிச்சி ரூ.800, முல்லை ரூ.900, அரளி ரூ.500, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.300 என விற்பனையானது. கடந்த விநாயகர் சதுர்த்தியை ஒப்பிடும் போது நேற்று பூக்களின் விலை குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஆயுதபூஜையின்போது ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையாது. அதனை பார்க்கும்போது இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு ஏமாற்றம் தான்" என்றனர்.