மதுரை-புனலூர் ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மதுரை-புனலூர் ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை,
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மதுரை-புனலூர் ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரடி ரெயில்
வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு கடந்த சில வருடங்களாக திருவனந்தபுரத்திலிருந்து, நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு நேரடியாக செல்லும் வகையில் தற்போது ரெயில் சேவை கிடையாது. கேரள பயணிகளின் வசதிக்காக மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படுவதாகவும், தமிழகத்தை சேர்ந்த தென்மாவட்ட பயணிகளுக்கு நேரடி ரெயில்சேவை இல்லாமல் இருப்பதாகவும் பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்ட பயணிகளுக்கு நேரடி ரெயில் சேவை வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
நீட்டிப்பு
மதுரையிலிருந்து தற்போது நாகர்கோவில் வழியாக புனலூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில், மீட்டர்கேஜ் பாதையில் இயக்கப்பட்ட போது, மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. ஆனால், இந்த ரெயில், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் வரை இயக்கப்பட்டது. தற்போது, அகலப்பாதையில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 200 கி.மீ.தூரத்துக்கு மேல் இயக்கப்படுவதால் ரெயில்வேயின் புதிய கொள்கை படி, எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
மதுரை-புனலூர் ரெயிலானது 139 கி.மீ தூரம் கேரளாவிலும், 272 கி.மீ. தூரம் தமிழகத்திலும் பயணிக்கிறது. பாசஞ்சர் ரெயில் போல இயக்கப்பட்டாலும், எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதால் இந்த ரெயிலுக்கான பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பு பயணிகளின் வசதிக்காக இந்த ரெயிலை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றி வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும். இந்த ரெயிலை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் காரைக்கால் வரை நீட்டிப்பு செய்யலாம். இதன் மூலம் ரெயில்வேக்கும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதுவரையில், மதுரை-புனலூர் ரெயிலை தற்காலிகமாக திருச்சி வரை நீட்டிப்பு செய்து, திருச்சி-காரைக்கால் டெமு ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயக்கலாம். தென்மாவட்ட பயணிகள் நலச்சங்கங்களின் தரப்பில் இந்த கோரிக்கை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.