மதுரை புறநகர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை; 10 பேர் கைது


மதுரை புறநகர் பகுதியில்  குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை; 10 பேர் கைது
x

மதுரை புறநகர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க நள்ளிரவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை புறநகர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க நள்ளிரவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இரவு முழுவதும் சோதனை

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் பல்வேறு வகையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் சிறப்பு தனிப்படை மூலம் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி போலீசார், விடிய விடிய நடத்திய இந்த குற்றத்தடுப்பு நடவடிக்கையில் மதுரை புறநகர் பகுதியில் உள்ள 51 தனியார் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனர். இதில் 1055 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 14 வழக்குகள், மற்ற பிரிவுகளில் 289 வழக்குகள் என மொத்தம் 303 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 72 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு, அதில் 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த குற்றத்தடுப்பு நடவடிக்கையில், சமயநல்லூர் உட்கோட்டம், பாலமேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தலைமறைவு குற்றவாளி

இதேபோல் ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சோதனையில், சுமார் 250 கிராம் கஞ்சா கடத்தி வந்த ஒருவர் மற்றும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மற்றொருவர் கைது செய்யப்பட்டனர். பேரையூர் போலீஸ் நிலைய சரகத்தில் நடைபெற்ற சோதனையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கை தொடரும் எனவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story