சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆவணி மாத மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அண்ணாமலை நகர்,
மகா அபிஷேகம்
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டு ஆவணி மாத மகா அபிஷேகம் கோவில் வளாகத்தில் உள்ள கனகசபையில் இன்று இரவு நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 9 மணிக்குள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று முடிந்தது. அதன்பிறகு கோவில் சித்சபையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் கனகசபைக்கு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து நடராஜருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
மகா ருத்ர ஜபம்
பின்னர் கோவில் வளாகத்தில் ஏராளமான தீட்சிதர்கள் பங்கேற்ற மகாருத்ர ஜபம் நடந்தது. மதியம் மகா ருத்ர ஹோமமும், மாலையில் மகாபூர்ணாகுதி, வடுகபூஜை, கன்னியா பூஜை, தம்பதியர் பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு இரவு யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்ட கடம் புறப்பாடாகி மேளதாளத்துடன் சித்சபைக்கு கொண்டு வரப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது.
அப்போது சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு விபூதி, பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.