முனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆம்பூர் வெங்கடசமுத்திரம் முனீஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
முனீஸ்வரர் கோவில்
ஆம்பூர் வட்டம் வெங்கடசமுத்திரம் குப்புராஜபாளைம் சாலை அத்திமாகுலபள்ளியை அடுத்த கன்னிகள் குட்டை மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் புலியேலம் வகையறா சுப்ப வெள்ளைகான் பையம்மாளின் குடும்ப குல தெய்வம் முனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோவில் நிறுவனர் வி.சிகாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கணபதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரசேவபலி, ஆச்சாரிய வர்ணம், தரவிய ஹோமம், பூர்ணாஹூதி, தீப ஆதராதனை நடைபெற்றது
தொடர்ந்து நேற்று காலை 5 மணி அளவில் கணபதி பூஜை, முனீஸ்வரர் வேத பாராயணம், நாடி சந்தானம், தத்வார்ச்சனை, வேதி கார்ச்சனை ஆகியவையும், 6 மணி அளவில் வசந்தா சிகாமணி, லிக்கிதா, சங்கீதா, ராஜலட்சுமி, தனலட்சுமி, கண்மணி உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றினர்.
கும்பாபிஷேகம்
பின்னர் குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் தேவகிகார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காலை 8 மணிக்கு கலச புறப்பாடு, 9 மணிக்கு முனீஸ்வரர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிகழ்ச்சியில் வி.எஸ்.குமரேசன், வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் ஆர்.ஜி.எஸ். பஸ் உரிமையாளர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன், உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி, சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் ஆர்.கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
கன்னி தெய்வங்கள் வாழ்ந்த இடம் என்பதால் ஊருக்கு கன்னிகள் குட்டை என பெயர் வந்த இடம். அந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் முனீஸ்வரன் கோவிலை குலதெய்வமாக வழிபாடு செய்பவருக்கு நினைத்த காரியங்கள் நடக்கும்.