கூடலூரில் சக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் தரிசனம்


கூடலூரில் சக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்-திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:30 AM IST (Updated: 24 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சக்தி விநாயகர் கோவில்

கூடலூர் பஜாரில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 20-ந்் தேதி தொடங்கியது. அப்போது காலை 9 மணிக்கு செவிடி பேட்டை சக்தி முனீஸ்வரன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து 21-ந் தேதி காலை 7 மணி முதல் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு யாக சாலையில் முதற்கால பூஜையும், 54 வித மூலிகை திரவிய ஹோமங்கள் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 22-ந் தேதி காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், 11மணிக்கு விமான கோபுர கலச சுத்தி அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு 3-ம் கால பூஜையும், பாவனாபிஷேகம், ராக கீத கணபதி தாள வழிபாடுகள் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்

இரவு 10 மணிக்கு தங்கம், வெள்ளி, பஞ்சலோக நவரத்ன எந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று (23-ந் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு கூனம்பட்டி ஆதீனம் மாணிக்க சுவாமிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் 4-ம் கால யாக சாலை பூஜை செய்தனர். தொடர்ந்து காலை 8 மணிக்கு கோவில் நிர்வாகத் தலைவர் பழனியப்பன், கார்த்திகேய குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் யாக சாலையில் இருந்து புனித தீர்த்த குடங்களை எடுத்தவாறு கோவிலை வலம் வந்தனர்.

தொடர்ந்து மூலவர் விமான கலசத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு தரிசனம் செய்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் கோவில் நுழைவு வாயில் கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story