மகா மாரியம்மன் கோவில் திருவிழா
குத்தாலம் அருகே மருத்தூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் புகழ்வாய்ந்த மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 25-ந் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கரகம், வீதி உலா, காவடி, கரக பால்குட திருவிழா நடந்து முடிந்து. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வாண வேடிக்கைகள், மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராமமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.